இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி.  

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்ததால், நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் கோலின் முன்ரோ மற்றும் சேஃபெர்ட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர்.

குறிப்பாக இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமதுவின் பந்தை கட்டம் கட்டி அடித்தனர். கலீல் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் முன்ரோ. புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் சேஃபெர்ட் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் விளாசினார். பின்னர் கலீல் வீசிய 4வது ஓவரில் முன்ரோ அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாச, நியூசிலாந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 

அதன்பின்னர் ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா ஆகியோர் பந்துவீச, யார் பந்துவீசினாலும் ஓவருக்கு பவுண்டரியோ சிக்ஸரோ தொடர்ந்து அடித்தனர். தொடக்க ஜோடியையே பிரிக்க முடியாமல் திணறிய நிலையில், முன்ரோவை 34 ரன்களில் வீழ்த்தினார் குருணல் பாண்டியா. 

முன்ரோவின் விக்கெட்டுக்கு பிறகு சேஃபெர்ட்டுடன் கேப்டன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அடித்து ஆடிய சேஃபெர்ட், அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பிறகு, இந்திய பவுலர்கள் போடும் ஒவ்வொரு பந்தையும் முடிந்தவரை அடித்து ஆட முயன்றார். சதத்தை நெருங்கிய அவரை 84 ரன்களில் கலீல் கிளீன் போல்டாக்கி அனுப்பினார்.

அதன்பிறகு அவர் விட்டுச்சென்ற பணியை கேப்டன் வில்லியம்சன் கையிலெடுத்தார். ஹர்திக் வீசிய 15வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை விளாசினார் வில்லியம்சன். அந்த ஓவரின் கடைசியில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான கேட்ச்சில் மிட்செல் வெளியேறினார். சாஹல் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே வில்லியம்சனும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் அடித்து ஆட, அவரை கடைசி வரை களத்தில் நிற்க அனுமதிக்கவில்லை இந்திய பவுலர்கள். டெய்லரை 23 ரன்களில் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். 

6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும் கடைசி நேரத்தில் குஜ்ஜெலின் அடித்து ஆடி 7 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 20 ரன்களை அடிக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. இந்திய அணி 220 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டுகிறது.