New Zealand is in the lead in the upcoming series against West Indies

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

நியூஸிலாந்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய நியூஸிலாந்து 46 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 249 ஓட்டங்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகளில் தொடக்க வீரர்களில் ஒருவரான கிறிஸ் கெயில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி 22 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

லீவில் நிலைத்து ஆட, அடுத்து வந்த ஷாய் ஹோப் டக் ஆனார். பின்னர் வந்த ஷிம்ரன் ஹெட்மைர், லீவிஸுடன் சற்று நிலைத்தபோதிலும் நான்கு பவுண்டரிகளுடன் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த ஜேசன் முகமது 9 ஓட்டங்கள் , கேப்டன் ஜேசன் ஹோல்டர் 8 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

அவர்களை அடுத்து ரோவ்மென் பாவெல் களம் காண, எவின் லீவிஸ் 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 76 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

லீவிஸை தொடர்ந்து வந்த ஆஷ்லே நர்ஸ் 2 ஓட்டங்கள் , ரான்ஸ்ஃபோர்டு பீட்டன் 3 ஓட்டங்களில் நடையைக் கட்டினர். கடைசி விக்கெட்டாக ரோவ்மென் பாவெல் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 59 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

கெஸ்ரிக் வில்லியம்ஸ் 16 ஓட்டங்கள் , ஷானன் கேப்ரியல் ஓட்டங்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூஸிலாந்து தரப்பில் டெளக் பிரேஸ்வெல் அதிகபட்சமாக 4 விக்கெட்கள், டோட் ஆஷ்லே 3 விக்கெட்கள், ஃபெர்குசன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் ஆடிய நியூஸிலாந்தில் பேட்டிங்கை தொடங்கிய ஜார்ஜ் வொர்கர் - காலின் மன்ரோ கூட்டணி முறையே, 57 ஓட்டங்கள் மற்றும் 49 ஓட்டங்களில் வெளியேறியது.

கேப்டன் கேன் வில்லியம்சன் 38 ஓட்டங்களும், டாம் லதாம், ஹென்றி நிகோலஸ் தலா 17 ஓட்டங்களும் எடுத்தனர்.

ராஸ் டெய்லர் - டோட் ஆஷ்லே கூட்டணி வெற்றிக்கு வழிநடத்தியது. இதில் டெய்லர் 49 ஓட்டங்கள் , ஆஷ்லே 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஆஷ்லே நர்ஸ், ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்கள், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஒரு விக்கெட் எடுத்தனர்.

டெளக் பிரேஸ்வெல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.