நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் மெளன்ட் மெளன்கனுய் நகரில் நேற்று பகலிரவாக நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய இங்கிலாந்து 37.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்கள் அடித்து வென்றது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த நியூஸிலாந்தில் மிட்செல் சேன்ட்னர் அதிகபட்சமாக 6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 63 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடக்க வீரர் மார்டின் கப்டில் 50 ஓட்டங்கள் , கிரான்ட்ஹோம் 38 ஓட்டங்கள் , டாம் லதாம் 22 ஓட்டங்கள் , ஃபெர்குசன் 19 ஓட்டங்கள் , ராஸ் டெய்லர் 10 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

காலின் மன்ரோ, மார்க் சாப்மேன், ஹென்றி நிகோலஸ், கேப்டன் டிம் செளதி, டிரென்ட் போல்ட் ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களில் வீழ்ந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்தில் கேப்டன் இயான் மோர்கன் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 62 ஓட்டங்கள் எடுத்தார். ஜேசன் ராய் 8 ஓட்டங்கள் , ஜானி பேர்ஸ்டோவ் 37 ஓட்டங்கள் , ஜோ ரூட் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக பென் ஸ்டோக்ஸ் 63 ஓட்டங்கள் , ஜோஸ் பட்லர் 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தினர்.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 2, ஃபெர்குசன், காலின் மன்ரோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றதையடுத்து 5 ஆட்டங்களைக் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது இங்கிலாந்து.