நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்திவிட்டனர் இந்திய பவுலர்கள்.

நியூசிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடந்துவரும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 252 ரன்களை எடுத்தது. முதல் நான்கு விக்கெட்டுகளை 18 ரன்களுக்கே இழந்துவிட்ட போதிலும், ராயுடு மற்றும் விஜய் சங்கரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. பொறுப்புடன் ஆடிய விஜய் சங்கர் 45 ரன்களில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ராயுடு 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். கேதர் ஜாதவும் சிறப்பாக ஆடி 34 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 252 ரன்களை எட்டியது. 

253 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட்டை 4வது ஓவரிலேயே வீழ்த்திவிட்டார் ஷமி. நிகோல்ஸை 8 ரன்களில் வெளியேற்றிய ஷமி, அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வந்த கோலின் முன்ரோவை 24 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார். இதையடுத்து களத்திற்கு வந்த டெய்லரை தனது முதல் ஓவரிலேயே அவுட்டாக்கினார் ஹர்திக் பாண்டியா. 

38 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது நியூசிலாந்து அணி. அதன்பிறகு கேப்டன் கேன் வில்லியம்சனுடன் டாம் லதாம் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, ரன் சேர்ப்பதில் அவசரப்படாமல், பார்ட்னர்ஷிப் அமைத்து வருகின்றனர். 16 ஓவருக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்துள்ளது நியூசிலாந்து அணி.