உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவதற்கு சில வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள் என்பது உறுதியான ஒன்று. ரோஹித், தவான், விராட் கோலி, அம்பாதி ராயுடு, தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்கள் உலக கோப்பை அணியில் கண்டிப்பாக இருப்பர். மொத்தம் 15 வீரர்கள் கொண்ட அணியை ஏப்ரல் 23ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்திய அணியில் 12 வீரர்கள் இடம்பெறுவது உறுதி. மீதமுள்ள 3 இடங்களுக்கு கடும்போட்டி நிலவுகிறது. ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ரஹானே, விஜய் சங்கர் ஆகியோரில் யார் அணியில் இடம்பெற போகிறார்கள் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு. மாற்று தொடக்க வீரர் மற்றும் ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையும் இந்திய அணியில் உள்ளது. மாற்று தொடக்க வீரருக்கான இடத்தை ரஹானேவிற்கு வழங்குவதற்கான வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதும் ஏறத்தாழ உறுதியாகிவிட்ட விஷயம். 

எனினும் ரிஷப் பண்ட் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் நாளுக்கு நாள் வலுத்துவருகின்றன. கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட பல முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவும் ரிஷப் பண்ட்டை உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கான காரணங்களையும் நெஹ்ரா அடுக்கியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள நெஹ்ரா, நிறைய வீரர்கள் சிறப்பான பங்களிப்பு செய்வார்கள். ஆனால் சிலர் மட்டுமே மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள். அந்த வகையில் உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் அப்படிப்பட்ட மேட்ச் வின்னர்கள் கண்டிப்பாக தேவை. ரிஷப் பண்ட் அப்படியான ஒரு மேட்ச் வின்னர்தான் என்பதால் அவர் கண்டிப்பாக உலக கோப்பையில் ஆடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

உலக கோப்பை அணியில் ரிஷப் பண்ட் தேவை என்பதற்கு நெஹ்ரா அடுக்கியுள்ள காரணங்கள்:

1. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் தொடக்க வீரர் ஷிகர் தவானை தவிர இடது கை பேட்ஸ்மேனே இல்லை. எனவே மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் தேவை. 

2. ரிஷப் பண்ட் எந்த வரிசையிலும் ஆடக்கூடியவர் என்பதால் அவரை கேப்டன் கோலியும் அணி நிர்வாகமும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். 

3. ரோஹித் சர்மாவுக்கு அடுத்து சர்வ சாதாரணமாக சிக்ஸர்களை அடிக்கக்கூடிய வீரராக ரிஷப் பண்ட் திகழ்கிறார். அதுவும் இக்கட்டான சூழல்களில் கூட மிகச் சாதாரணமாக பெரிய ஷாட்டுகளை ஆடுகிறார். 

4. இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகிய மூவர் மட்டுமே மேட்ச் வின்னர்களாக திகழ்கின்றனர். இவர்களின் வரிசையில் கண்டிப்பாக ரிஷப் பண்ட் சிறந்த மேட்ச் வின்னராக இருப்பார். 

5. ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோர் சிறந்த வீரர்கள் தான் என்றாலும் அணிக்கு ஒரு நிரந்தர மிடில் ஆர்டர் வீரர் தேவை. அது ரிஷப் பண்ட் தான் என்று நெஹ்ரா கூறியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். அவரது பயமற்ற துடிப்பான ஆட்டத்தின் விளைவாக, முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பண்ட்டை உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.