இந்திய ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கெளரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. நீரஜ் சோப்ராவுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய ஈட்டி எறிதல் ஸ்டார் வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த கௌரவப் பதவியின் சின்னத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று புது தில்லியில் உள்ள சவுத் பிளாக்கில் நடந்த விழாவில் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கினார்.

நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கெளரவ பதவி

"லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசியப் பெருமையின் உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியவர். அவர் விளையாட்டுத் துறை மற்றும் ஆயுதப் படைகளில் உள்ள தலைமுறையினருக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறார்" என்று ராஜ்நாத் சிங் கூறினார். இந்நிகழ்ச்சியில் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி மற்றும் இந்திய ராணுவம் மற்றும் பிராந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாட்டுக்கும் ராணுவத்துக்கும் பெருமை

2016-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்த நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தின் ராஜ்புதானா ரைபிள்ஸ் பிரிவில் பணியாற்றியுள்ளார். டிசம்பர் 24, 1997 அன்று ஹரியானாவின் பானிபட் மாவட்டத்தில் உள்ள கந்த்ரா கிராமத்தில் பிறந்த இவர், சர்வதேச தடகளத்தில் தனது குறிப்பிடத்தக்க சாதனைகள் மூலம் நாட்டிற்கும் ஆயுதப் படைகளுக்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளார்.

தங்க நாயகன் நீரஜ் சோப்ரா

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளப் பிரிவில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ சோப்ரா படைத்தார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2023 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கமும் வென்று தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டைமண்ட் லீக் போட்டிகளிலும் பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருது

90.23 மீட்டர் (2025) என்ற அவரது தனிப்பட்ட சிறந்த எறிதல், இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.