ரஞ்சி கிரிக்கெட் தொடரில் மும்பைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற கடைசி நாளான இன்று 265 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.

312 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கைவசம் 10 விக்கெட்டுகள் இருப்பதால் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 228 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிருத்வி ஷா 71, சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்கள் எடுத்தனர்.

குஜராத் தரப்பில் ஆர்.பி.சிங், சின்டான் காஜா, ரூஜுல் பட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி 104.3 ஓவர்களில் 328 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் பார்த்திவ் படேல் 90, ஜுனேஜா 77 ஓட்டங்கள் எடுத்தனர்.

மும்பை தரப்பில் ஷ்ரதுல் தாக்குர் 4 விக்கெட்டுகளையும், அபிஷேக் நய்யார், சாந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 100 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 82 ஓட்டங்கள் விளாச, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 67 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நான்காவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணியில் சூர்யகுமார் 49 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த சித்தேஷ் லேடு 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து அபிஷேக் நய்யார் களமிறங்க, கேப்டன் ஆதித்ய தாரே 69 ஓட்டங்களில் வீழ்ந்தார். இதன்பிறகு வந்தவர்கள் பெரிய அளவில் ரன் சேர்க்காதபோதும், அபிஷேக் நய்யார் அபாரமாக ஆடினார். 146 பந்துகளைச் சந்தித்த அவர் 5 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் குவித்து கடைசி விக்கெட்டாக வெளியேற, மும்பையின் 2-ஆவது இன்னிங்ஸ் 137.1 ஓவர்களில் 411 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது. குஜராத் தரப்பில் காஜா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 312 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கோஹேல் 8, பி.கே.பன்சால் 34 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.