முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முந்தைய லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் இடையேயான முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, மறுபடியும் இலங்கையை சந்தித்தது.

இந்திய அணியில் ரிஷாப் பான்ட் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் 2 ஆட்டத்தில் விளையாட தடை விதிக்கப்பட்ட கேப்டன் சன்டிமாலுக்கு பதிலாக சுரங்கா இடம் பெற்றார். திசரா பெரேரா கேப்டன் பொறுப்பை கவனித்தார். மழை காரணமாக ஆட்டம் 95 நிமிடம் தாமதமாக தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் மட்டும் குறைக்கப்பட்டது.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குணதிலகா, குசல் மென்டிஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார்கள். 2 ஓவர்களில் ஸ்கோர் 25 ரன்னாக இருக்கையில் அடித்து ஆடிய குணதிலகா ஷர்துல் தாகூர் பந்து வீச்சில் சுரேஷ் ரெய்னாவால் அருமையாக கேட்ச் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.

அடுத்து களம் கண்ட குசல் பெரேராவாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் போல்டு ஆகி நடையை கட்டினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும் மறுமுனையில் குசல் மென்டிஸ் நிலைத்து நின்று ஆடி அரைசதம் அடித்தார். தரங்கா கேப்டன் திசரா பெரேரா ஆகியோர் தன் பங்குக்கு வேகமாக ரன் சேர்த்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த ஜீவன் மென்டிஸ் வாஷிங்டன் சுந்தர் பந்தில் போல்டு ஆனார்.

அதிரடி காட்டிய குசல் மென்டிஸ் 38 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் யுஸ்வேந்திர சாஹல் பந்து வீச்சில் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு இலங்கை அணியின் ரன் குவிப்பு வேகத்தை இந்திய அணி கட்டுப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும், ஜெய்தேவ் உனட்கட், யுஸ்வேந்திர சாஹல், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 19 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 11 ரன்களும், ஷிகர் தவான் 8 ரன்களும் எடுத்து சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜெயா பந்து வீச்சில் விரைவில் ஆட்டம் இழந்தனர். அடுத்து களம் கண்ட லோகேஷ் ராகுல் 18 ரன், சுரேஷ் ரெய்னா 27 ரன்களும் எடுத்து  சிறிது நேரம் தாக்குப்பிடித்து அவுட் ஆனார்கள்.

அடுத்து ஜோடி சேர்ந்த மனிஷ் பாண்டே (42 ரன்கள், 31 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), தினேஷ் கார்த்திக் (39 ரன்கள், 25 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) ஆகியோர் கடைசி வரை நிலைத்து நின்று அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முந்தைய லீக் ஆட்டத்தில் இலங்கையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது. நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.