National shooters ariyana anisa seyyad won gold medal with national record
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அரியாணாவின் அனிசா செய்யது தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்ட அனிசா, இறுதிச்சுற்றில் 33 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
தேசிய அளவிலான இறுதிச்சுற்றில் இத்தகைய புள்ளிகள் எட்டப்படுவது இதுவே முதல் முறை. எட்டு பேர் கலந்து கொண்ட இந்த இறுதிச்சுற்றில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களான ஷீத்தல் சிவாஜி தோரட் 30 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், ராஹி சர்னோபத் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனர்.
இதனிடையே, ஜூனியர் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மானு பேக்கர் தங்கம் வென்று அசத்தினார். அவரை உள்ளடக்கிய அணி ஜூனியர் சிவிலியன் அணிகளுக்கான பிரிவிலும் தங்கம் வென்றது. இது, மானு பேக்கர் இந்தப் போட்டியில் வெல்லும் 10 மற்றும் 11-வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஜூனியர் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் அரியாணாவின் சிங்கி யாதவ், இறுதிச்சுற்றில் 31 புள்ளிகளை எட்டி தேசிய சாதனையுடன் தங்கம் கைப்பற்றினார்.
அதே மாநிலத்தைச் சேர்ந்த கெளரி ஷியோரன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், மகாராஷ்டிரத்தின் சயி அசோக் காட்போல் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலமும் வென்றனர்.
