National shooter Sushil Kale Gold Medal winner

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் இராணுவ அணி வீரர் சுஷில் காலே தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் சுஷில் காலே 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இது தேசிய அளவிலான இறுதிச்சுற்றில் அதிகபட்ச புள்ளியாகும்.

இந்தப் பிரிவில் ஏர் இந்தியா வீரர் ககன் நரங் 246.6 புள்ளிகளுடன் வெள்ளியும், ரியோ ஒலிம்பிக் பங்கேற்பாளரான செயின் சிங் 225.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.

மற்றொரு பிரிவான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் அணிகளுக்கான பிரிவில் சுஷில் காலே, செயின் சிங், சுரேந்திர சிங் ரத்தோட் ஆகியோர் அடங்கிய அணி 1866.9 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.

உத்தரப் பிரதேச அணி 1849.8 புள்ளிகளுடன் வெள்ளியும், ஏர் இந்தியா அணி 1845.6 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் வென்றன.

அதேபோன்று, ஜூனியர் ஆடவர் பிரிவில் பஞ்சாப் வீரர் நீரஜ் குமார் 245.4 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஜூனியர் நேஷனல் இறுதிச்சுற்றில் இந்த புள்ளியே அதிகபட்சமாகும்.

இந்தப் பிரிவில் குஜராத் வீரர் பிருத்விராஜ் 243.1 புள்ளிகளுடன் இரண்டாவது இடமும், பஞ்சாப் வீரர் ஃபடே சிங் தில்லான் 222.6 புள்ளிகளுடன் மூன்றாவது இடமும் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.