National Basketball Here are the teams that have won in the fourth days p
தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் ஆடவர் பிரிவில் வருமான வரித்துறை, ரயில்வே, ஐ.ஓ.பி., விமானப் படை அணிகளும் மகளிர் பிரிவில் வடக்கு எல்லைப்புற (ஃபிராண்டியர்) ரயில்வே அணியும், கேரள மாநில மின்சார வாரிய அணியும் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறின.
கோயம்புத்தூர் மாவட்டம், வ.உ.சி. மைதானத்தில் 52-ஆவது ஆடவர் நாச்சிமுத்து கௌண்டர் நினைவுக் கோப்பை, 16-ஆவது மகளிர் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டிகள் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதில், நான்காவது நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் பிரிவு முதல் ஆட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், இந்திய ரயில்வே அணியும் எதிர்கொண்டன.
இதில்ம், 71 - 52 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ரயில்வே அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி.
அதேபோன்று, இரண்டாவது ஆட்டத்தில், வருமான வரித் துறை அணியும், விமானப் படை அணியும் மோதியதில் 79-69 என்ற புள்ளிகள் கணக்கில் வருமான வரித்துறை அணி வென்றது.
ஆடவர் பிரிவு சுழற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், வருமான வரித் துறை, ஐ.ஓ.பி., இந்திய ரயில்வே, விமானப் படை ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
அதேபோன்று, மகளிர் பிரிவு ஆட்டத்தில் வடக்கு எல்லைப்புற (ஃபிராண்டியர்) ரயில்வே அணி 75 - 70 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை தோற்கடித்தது.
மற்றோர் ஆட்டத்தில் கேரள மாநில மின்சார வாரிய அணியும், சத்தீஸ்கர் மாநில அணியுன்ம் மோதியதில் 43-39 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள மாநில மின்சார வாரிய அணி வென்றது.
