இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 303 ரன்களை குவித்துள்ளது. 

தொடக்க வீரர் மயன்க் அகர்வால் அரைசதம் அடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி, ரஹானே ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. கோலி 23 ரன்களிலும் ரஹானே 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் வழக்கம்போலவே நங்கூரம் போட்டு நிலைத்து நிதானமாக ஆடிய புஜாரா 18வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் இது புஜாரா அடித்த மூன்றாவது சதம். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை, ஏற்கனவே 3 சதங்கள் அடித்துள்ள கவாஸ்கருடன் பகிர்ந்துள்ளார். இந்த பட்டியலில் 4 சதங்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் புஜாரா, இந்திய அணியை பல இக்கட்டான சூழல்களில் காப்பாற்றியுள்ளார். அதை தொடர்ந்து செய்துவருவது அணிக்கு கூடுதல் பலம். பொதுவாகவே மிகவும் மந்தமாக ஆடுகிறார் என்ற பெயரை பெற்றவர் புஜாரா. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை புஜாராவின் ஆட்டம் தான் சரி. இந்த தொடரில் கூட மிகவும் அதிகமான பந்துகளை எதிர்கொண்டுள்ளார் புஜாரா. சிட்னி டெஸ்டில் 134 பந்துகளில் அரைசதம் கடந்த புஜாரா, 199 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். 

ஆஸ்திரேலிய தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள புஜாரா, அதிக பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார். இதுவரை 1135 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். 7வது இன்னிங்ஸை ஆடிவரும் புஜாரா, 1135 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 1033 பந்துகளை எதிர்கொண்ட கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார் புஜாரா. அதுமட்டுமல்லாமல் இன்னும் 69 பந்துகளை எதிர்கொண்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட டிராவிட்டின்(1203 பந்துகள்) சாதனையை முறியடித்து விடுவார். 

இப்படியாக எதிரணியினரை சோதிக்கும் புஜாராவை பார்த்து ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயன் கிண்டலாக ஒரு கேள்வியை கேட்டார். புஜாரா சதமடித்த பிறகு, நாதன் லயன் பவுலிங் வீசிக்கொண்டிருந்தபோது புஜாரா எதிர்முனையில் நின்றார். அப்போது அவரிடம் சென்று, இன்னும் உங்களுக்கு போர் அடிக்கவில்லையா என்று நாதன் லயன் கேட்க, அதற்கு புஜாரா புன்னகையை பதிலாக உதிர்த்தார். 

நாதன் லயன் புஜாராவிடம் கேட்டது, ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. எவ்வளவு நொந்து போயிருந்தால் நாதன் லயன் அப்படியொரு கேள்வியை கேட்டிருப்பார். ஆடும் இன்னிங்ஸ்களில் பெரும்பாலானவற்றில் சளிப்பே இல்லாமல் 200க்கும் மேற்பட்ட பந்துகளை ஆடினால் இப்படியொரு கேள்வியை கேட்கத்தானே தோன்றும்.