ஐபிஎல்-ல் தேர்வாகியுள்ள நடராஜனின் முன்மாதிரி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன்தான்.
ஐபிஎல் போட்டியில் ஆடும் வாய்ப்பைப் பெற்றிருப்பது குறித்து இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் கூறியதாவது:
இது கனவா அல்லது நனவா என தெரியவில்லை. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடுவேன். அதன்மூலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என ஒருபோதும் நினைத்ததில்லை.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றபோது கடுமையான நெருக்கடியில் இருந்தேன். ஆனால் அஸ்வின், முளி விஜய், தமிழ்நாடு பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி ஆகியோர் எனக்கு தன்னம்பிக்கை ஊட்டினர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற எனது கனவு நனவாகிவிட்டது. அடுத்ததாக ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய வீரர்களை சந்திக்கவும், அவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறேன்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன்தான் எனது முன்மாதிரி. ஐபிஎல் போட்டியின்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்றார்.
