narwey and american players won Gold in World Athletics Championship

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் 400 மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில் நார்வே வீரர் கேர்ஸ்டன் வார்ஹோல்மும், மகளிர் 400 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் பில்லிஸ் பிரான்சிஸ்ஸும் தங்கப் பதக்கம் வென்றனர்.

பதினாறாவது தடகள சாம்பியன்ஷிப் போட்டி இலண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் 400 மீ. தடைத் தாண்டுதல் ஓட்டத்தில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்த நார்வே வீரர் கேர்ஸ்டன் வார்ஹோல்ம் 48.35 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றார்.

துருக்கியின் யஷ்மானி கோபெல்லோ 48.49 விநாடிகளில் இலக்கை எட்டி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

இதே பிரிவில் கடந்த இரு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த அமெரிக்காவின் கெரோம் கிளமென்ட் 48.52 விநாடிகளில் இலக்கை எட்டி 3-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

மகளிர் 400 மீ. ஓட்டத்தில் அமெரிக்காவின் பில்லிஸ் பிரான்சிஸ் 49.92 விநாடிகளில் இலக்கை எட்டி 'பெர்சனல் பெஸ்ட்' சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றார்.

பஹ்ரைன் வீராங்கனை சல்வா ஈத் நாஸர் 50.06 விநாடிகளில் இலக்கை எட்டி தேசிய சாதனையோடு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அமெரிக்காவின் அலிசன் பெலிக்ஸ் 50.08 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.