Narender Bhatra to head Indian Olympic Association Rajiv Mahadeva elected as general secretary
சர்வதேச வலைகோல் பந்தாட்டத்தின் கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் நரேந்தர் பத்ரா (56), இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அந்த சங்கத்தின் பொதுச் செயலராக ராஜீவ் மேத்தா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஆசிய டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவர் அனில் கன்னா விலகிக் கொண்டார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில், இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பு தலைவர் வீரேந்தர் பாஷ்யாவும் போட்டியிட இருந்தார். எனினும், பின்னர் விலகிக்கொள்வதாக அவர் அறிவித்தார்.
அதனையடுத்து டெல்லியில் நேற்று நடைபெற்ற பொது குழுக் கூட்டத்தில் நரேந்தர் பத்ரா ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
விளையாட்டு விதிமுறைகளை மீறி இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் நடைபெற இருப்பதாகக் குற்றம்சாட்டி, வழக்குரைஞரும், விளையாட்டு ஆர்வலருமான ராகுல் மெஹ்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "ஒலிம்பிக் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்றும் "எனினும் இந்த மனு மீதான விசாரணை நிறைவடையும்போது, சம்பந்தப்பட்ட தேர்தல் முடிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்" என்றும் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
