Namakkal student who won gold in the weight lifting welcomed with their own village ...

ஆசிய அளவிலான பளு தூக்குதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய நாமக்கல் மாணவி கமலிக்கு சொந்த கிராமத்தில் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே அக்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் - கலைச்செல்வி தம்பதியின் மகள் கமலி. இவர் முதுநிலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கடந்த 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ஆசிய அளவிலான பளு தூக்குதல் போட்டி நடந்தது. இதில் 47 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்ட கமலி, 350 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்று அசத்தினார். 

இந்த நிலையில், சொந்த கிராமத்துக்கு திரும்பிய கமலிக்கு ஊர் மக்கள் சார்பில் மேள தாளங்களுடன் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "பளு தூக்குதல் போட்டியில் பங்கேற்பதற்காக நிறைய பயிற்சிகள் மேற்கொண்டேன். ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க எனது பெற்றோர் மற்றும் இந்த கிராம மக்கள் நிறைய உதவிகள் செய்தனர். அதை நான் மறக்க மாட்டேன். 

பளு தூக்கும் போட்டியில் பல பதக்கங்கள் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே எனது இலட்சியம்.இரயில்வே துறையில் பணியாற்ற எனக்கு விருப்பம் உள்ளதால், அதற்கு விண்ணப்பித்துள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.