அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றதன்மூலம் அமெரிக்க ஓபனில் 3-வது முறையாக பட்டம் வென்றுள்ளார் நடால்.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் மோதினர்.

இதில், 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கெவின் ஆண்டர்சனை தோற்கடித்து சாம்பியன் வென்றார் ரஃபேல் நடால்.

இந்த பட்டம் அமெரிக்க ஓபனில் நடால் வென்ற மூன்றாவது பட்டம் ஆகும். இதற்கு முன்னர் 2010, 2013 ஆகிய ஆண்டுகளில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இங்கு பட்டம் வென்றுள்ளார் நடால்.

கடந்த ஜூனில் பிரெஞ்சு ஓபனில் 10-ஆவது பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்த நடால், இந்த ஆண்டில் இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியிருக்கிறார்.

இந்த ஆண்டில் ஐந்து பட்டங்களை வென்றிருக்கும் நடாலுக்கு, ஒட்டுமொத்தமாக இது 74-வது பட்டமாகும்.

அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு அவர் கூறியதாவது:

“போட்டி முடிவுகளோடு ஒப்பிடுகையில் 2017 சீசன் எனக்கு சிறந்த சீசனாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் விளையாடியிருக்கிறேன். அதில் இரு முறை பட்டம் வென்றிருக்கிறேன். இது மிகப்பெரிய விஷயமாகும். மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச் சுற்றுகளில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல.

இந்த ஆண்டு எனக்கு சவால்மிக்க ஆண்டாக இருந்தாலும், களிமண் தரையில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் வென்றிருக்கிறேன். இந்த சீசன் எனக்கு உணர்ச்சிபூர்வமான ஒன்றாகும். ஏனெனில் காயம் காரணமாக ஏற்பட்ட கடினமான தருணங்களை கடந்து வந்திருக்கிறேன்” என்றார்.