My wish is to win a lot of medals in the world championship match - Bajrang Punya ...

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஏராளமான பதக்கங்களை வெல்வது தான் என் விருப்பம் என்று இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் பூனியா தங்கப் பதக்கம் வென்றார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியது:

“நான் இப்போது ஆசிய சாம்பியன். தங்கப் பதக்கம், தங்கப் பதக்கம்தான். இந்த தங்கப் பதக்கத்தோடு, நான் இதற்கு முன்னர் வென்ற பதக்கங்களை ஒப்பிட முடியாது.

ஆசிய சாம்பியனாக இருப்பது மிகப்பெரிய விஷயமாகும். சர்வதேச அளவிலான போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்று குவிக்க விரும்புகிறேன்.

ஆசியாவை எடுத்துக் கொண்டால் ஈரான், ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள்தான் உலகின் மிகச்சிறந்த வீரர்களாக இருக்கிறார்கள்.

நான் ஆசிய சாம்பியனான பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்டில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டிக்காக இப்போதே தீவிர பயிற்சியைத் தொடங்கிவிட்டேன். உலக சாம்பியன்ஷிப்பில் கடும் சவால் இருக்கும். ஆனால் நான் ஏற்கெனவே கடினமாக உழைத்து வருகிறேன்.

எனது பலம் என்னவோ, அதன் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். அதனால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இன்னும் ஆக்ரோஷமாக ஆட முடியும்.

நான் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் எனது பலம் என எப்போதுமே யோகேஷ்வர் தத் கூறுவார். நான் தடுப்பாட்டம் ஆட முயற்சிக்கிறபோது, அது எனக்கு எதிராக அமைந்துவிடுகிறது.

தடுப்பாட்டம் ஆட முயற்சிப்பது மட்டுமே எனது ஆட்டத்தில் உள்ள குறையாகும். எனவே அந்தத் தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.

உலகக் கோப்பை போட்டியில் தடுப்பாட்டம் ஆட முயற்சித்தேன். அதனால் புள்ளிகளை இழந்தேன். எப்போதுமே எதிராளிக்கு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை கொடுக்கக்கூடாது என யோகேஷ்வர் தத் அறிவுரை கூறியிருக்கிறார் என்று கூறினார்.