My goal is to win medal in Commonwealth Games - Ashwini Ponnappa ...
அடுத்தாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு என்று பாட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கூறினார்.
சமீபத்தில் நிறைவடைந்த சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அஸ்வினி பொன்னப்பா மகளிர் இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டியுடனும், கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜுடனும் இணைந்து பட்டம் வென்று அசத்தினார்.
இந்த நிலையில் அஸ்வினி பொன்னப்பா நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
“இந்தியாவில் ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வீரர், வீராங்கனைகள் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், உலகளவிலான போட்டிகளில் அவர்கள் சாம்பியன்களாவதற்கு சில காலமாகும்.
ஏனெனில், இரட்டையர் பிரிவில் இருவர் இணைந்து பயிற்சி பெற வேண்டியுள்ளது. அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியிருக்கிறது. ஒற்றையர் பிரிவில் அந்த சவால் இருப்பதில்லை. அந்த வகையில் இரட்டையர் பிரிவில் சிரக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
தேசிய சாம்பியன்ஷிப்பில் இரு பட்டங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் கலப்பு இரட்டையரில் முதல் முறையாக பட்டம் வென்றது கூடுதல் மகிழ்ச்சி. இப்போட்டியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு முதல்நிலை போட்டியாளர்களும் விளையாடியதால், சிறப்பான போட்டியாக இருந்தது.
சிக்கி ரெட்டி, பிரணவ் ஜெர்ரி ஆகியோர் மிகுந்த அனுபவசாலிகள் ஆகியுள்ளனர். கடந்த ஓராண்டாக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
அடுத்தாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதே எனது இலக்கு. அதுவே அனைவரது இலக்காகவும் இருப்பதால், சற்று சவால் அளிப்பதாகவே இருக்கும் என்று அஸ்வினி பொன்னப்பா கூறினார்.
