ஏடிபி உலக டூர் பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இலண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில் முர்ரே 6-3, 6-4 என்ற நேர் செட்களில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் முர்ரே. இந்த சீசனில் தொடர்ச்சியாக 24 ஆட்டங்களில் வென்றுள்ள முர்ரே, தொடர்ச்சியாக 5-ஆவது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதன்மூலம் ஏடிபி பைனல்ஸில் தொடர்ச்சியாக கோலோச்சி வந்த நோவக் ஜோகோவிச்சின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜோகோவிச் 5 முறை இந்தப் போட்டியில் வாகை சூடியுள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, "இது மிகச்சிறப்பான நாள். ஏடிபி பைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதேபோல் இந்த சீசனை முதல் நிலை வீரர் என்ற பெருமையோடு முடித்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். இதை ஒருபோதும் நான் எதிர்பார்த்ததில்லை' என்றார்.
