இந்திய அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 10 ரன்களுக்கு உள்ளாகவே விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை குவித்துள்ளது. 

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும் பும்ரா, உமேஷ், ஹனுமா விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஸ்பின் பவுலரே இல்லாமல் ஹனுமா விஹாரியை மட்டும் நம்பி களமிறங்கிய இந்திய அணியை விஹாரி ஏமாற்றவில்லை. அவரது பங்கிற்கு அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இரண்டுமே முக்கியமான விக்கெட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 70 ரன்கள் அடித்த மார்கஸ் ஹாரிஸையும் 45 ரன்கள் அடித்த ஷான் மார்ஷையும் ஹனுமா விஹாரி வீழ்த்தினார்.  

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜயை கிளீன் போல்டாக்கி டக் அவுட்டாக்கி அனுப்பினார் மிட்செல் ஸ்டார்க். அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளை முடிந்து வந்ததும் ராகுலை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் ஹேசில்வுட்.  இதையடுத்து 8 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. 

இதைத்தொடர்ந்து புஜாராவும் கோலியும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். முரளி விஜயும் ராகுலும் தொடர்ந்து சொதப்பிவருகின்றனர். பிரித்வி ஷா காயத்திலிருந்து குணமடையும் பட்சத்தில் அடுத்த போட்டியில் பிரித்வி ஷா மற்றும் ரோஹித் சர்மாவை தொடக்க ஜோடியாக முயற்சி செய்து பார்க்கலாம்.