Mumbais maiden win over Pune Warriors

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-ஆவது லீக் ஆட்டத்தில் வெறும் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்ததன் மூலம் புணே அணி மும்பையின் தொடர் வெற்றியை முடக்கியது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28-ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கைத் தேர்வுச் செய்ததையடுத்து பேட் செய்த புணே அணியில் திரிபாதியும், அஜிங்க்ய ரஹானேவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ஜான்சன் வீசிய முதல் ஓவரில் சிக்ஸரை விளாசி அதிரடி காட்டிய திரிபாதி, மெக்லீனாகான் வீசிய அடுத்த ஓவரில் ஒரு பவுண்டரியை விரட்டினார். அதே ஓவரில் ரஹானே தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை விரட்ட, புணேவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 

அந்த அணி 9.3 ஓவர்களில் 76 ஓட்டங்களை எட்டியபோது ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. அவர் 32 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஸ்டீவன் ஸ்மித் களமிறங்க, மறுமுனையில் நின்ற திரிபாதி, கரண் சர்மா பந்துவீச்சில் சிக்ஸரை விளாசினார். இதனால் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ஓட்டங்களை எட்டியது புணே. 

அந்த அணி 11.3 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது திரிபாதி ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்பிறகு ஸ்மித் 17, பென் ஸ்டோக்ஸ் 17, தோனி 7 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, புணே அணி 17.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு வந்த மனோஜ் திவாரி 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, புணே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை தரப்பில் கரண் சர்மா, ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய மும்பை அணியில் ஜோஸ் பட்லர் - பார்த்திவ் படேல் இணை 4.2 ஓவர்களில் 35 ஓட்டங்கள் சேர்த்தது. பட்லர் 17 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த நிதிஷ் ராணா 3 ஓட்டங்களில் நடையைக் கட்டினார். 

இதையடுத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மா பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்க, பார்த்திவ் படேல் 27 பந்துகளில் 33 ஓட்டங்கள் சேர்த்து வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் போல்டு ஆனார். 

பின்னர் வந்த கரண் சர்மா 11 ஓட்டங்கள் எடுத்தார். இதையடுத்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இணைந்தார் கிரண் போலார்ட்.

ரோஹித் சர்மா சற்று வேகம் காட்ட, கடைசி 4 ஓவர்களில் 39 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இம்ரான் தாஹிர் வீசிய 17-ஆவது ஓவரில் போலார்ட் 9 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஹார்திக் பாண்டியா களமிறங்க 17-ஆவது ஓவரில் 4 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தன. இதனிடையே ரோஹித் சர்மா 33 பந்துகளில் அரை சதமடிக்க, பாண்டியா இரு பவுண்டரிகளை விரட்டினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 24 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

ஆனால், பென் ஸ்டோக்ஸ் வீசிய 19-ஆவது ஓவரில் மும்பை அணியால் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டன. உனட்கட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பாண்டியா 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்த பந்தில் சிக்ஸரை விளாசிய ரோஹித் சர்மா, அதற்கடுத்த பந்தில் உனட்கட்டிடமே கேட்ச் ஆனார். அவர் 39 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 58 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசிப் பந்தில் ஹர்பஜன் சிங் சிக்ஸரை விளாசியபோதும், மும்பை அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

புணேயின் இந்த வெற்றியின் மூலம், தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் வென்றிருந்த மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு முடங்கியது.