Asianet News TamilAsianet News Tamil

குஜராத்தைவிட, மும்பை அணி 108 ஓட்டங்கள் முன்னிலை…

mumbai lead-of-108-then-gujarat
Author
First Published Jan 13, 2017, 12:02 PM IST

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 83.5 ஓவர்களில் 228 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிருத்வி ஷா 71, சூர்யகுமார் யாதவ் 57 ஓட்டங்கள் எடுத்தனர்.

குஜராத் தரப்பில் ஆர்.பி.சிங், சின்டான் காஜா, ரூஜுல் பட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணியில் பார்த்திவ் படேல் 90 ஓட்டங்கள், ஜுனேஜா 77 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 92 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

3-ஆவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 104.3 ஓவர்களில் 328 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மும்பை தரப்பில் ஷ்ரதுல் தாக்குர் 4 விக்கெட்டுகளையும், அபிஷேக் நய்யார், சாந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 100 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய மும்பை அணியில் தொடக்க வீரர் ஹெர்வாத்கர் 16 ஓட்டங்களிலும், பிருத்வி ஷா 44 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

இதன்பிறகு ஷ்ரேயஸ் ஐயரும், சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்தனர். அசத்தலாக ஆடிய இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் சேர்த்தது. 137 பந்துகளைச் சந்தித்த ஷ்ரேயஸ் ஐயர் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து கேப்டன் ஆதித்ய தாரே களமிறங்கினார். 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் மும்பை அணி 67 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் 45, ஆதித்ய தாரே 13 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

குஜராத் தரப்பில் காஜா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

தற்போதைய நிலையில் மும்பை அணி 108 ஓட்டங்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. அந்த அணியின் கைவசம் ஏழு விக்கெட்டுகள் உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios