mumbai indians defeats kkr and retain play off chance

ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடிவரும் மும்பை அணி, நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

முதல் 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்த மும்பை அணி, எஞ்சிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில், பஞ்சாப்பையும் கொல்கத்தாவையும் இருமுறையும் வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. இதன்மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை மும்பை அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். சூர்யகுமார் யாதவும் லெவிஸும் களமிறங்கினர். லெவிஸ் 18 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமாருடன் ரோஹித் ஜோடி சேர்ந்தார்.

நிதானமாக ஆடிய சூர்யகுமாரும் 36 ரன்களில் அவுட்டாக, ரோஹித்துடன் இஷான் கிஷான் இணைந்தார். முதல் 10 ஓவருக்கு மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அதன்பிறகு இஷான் கிஷான் ருத்ரதாண்டவம் ஆடி, ஈடன் கார்டன் மைதானத்தை அதிரடியால் அதிரவைத்தார். 11வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார் இஷான். பிரசித் வீசிய 12வது ஓவரில் ரோஹித் சர்மா இரண்டு பவுண்டரிகளும் இஷான் கிஷான் ஒரு பவுண்டரியும் அடித்தனர்.

குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் இஷான் கிஷான். அந்த ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசி மிரட்டினார். இஷானின் அதிரடியால், ஒரே ஓவரில் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 14 ஓவருக்கு 137 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை மும்பை அடைந்தது.

அதிரடியாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்த இஷான் கிஷான், 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அவுட்டானார். ஹர்திக் பாண்டியா 19 ரன்களும் ரோஹித் சர்மா 36 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரை பியூஸ் சாவ்லா வீசினார். இந்த ஓவரில் பென் கட்டிங் இரண்டு சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் விளாசினார். கடைசி பந்தில் குருணல் பாண்டியா தனது பங்கிற்கு ஒரு சிக்ஸர் விளாச, மும்பை 20 ஓவர் முடிவில் 210 ரன்கள் குவித்தது.

211 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து ஆட தவறியதால், 18.1 ஓவருக்கு வெறும் 108 ரன்களுக்கே கொல்கத்தா அணி ஆல் அவுட்டானது.

இதையடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. 11 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆட்டநாயகனாக இஷான் கிஷான் தேர்வு செய்யப்பட்டார்.