இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி விஜய் ஹசாரே தொடரை மும்பை அணி வென்றது.

விஜய் ஹசாரே தொடர் கடந்த ஒரு மாதமாக நடந்துவருகிறது. இந்த தொடரின் இறுதி போட்டியில் காம்பீர் தலைமையிலான டெல்லி அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான மும்பை அணியும் மோதின. 

இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்ததால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 

டெல்லி அணியின் கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான காம்பீர் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து மனன் ஷர்மா, உன்முக்த் சந்த், நிதிஷ் ராணா ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். துருவ் ஷோரே மற்றும் ஹிம்மட் சிங் ஆகிய இருவர் மட்டும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடினர். துருவ் 31 ரன்களும் ஹிம்மட் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஜார்கண்ட்டுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற செய்த டெல்லி வீரர் பவன் நேகி இந்த போட்டியில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து டெல்லி அணி 45.4 ஓவருக்கு வெறும் 177 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

178 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, முதலிரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விளாசி மிரட்டினார். ஆனால் மூன்றாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். அதனால் 40 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி. 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ஆதித்யா தரே மற்றும் சித்தேஷ் லத் ஆகிய இருவரும் விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஆதித்யா 71 ரன்களுக்கும் சித்தேஷ் 48 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 

இவர்களின் சிறப்பான மற்றும் பொறுப்பான ஆட்டத்தால் 35 ஓவரிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.