Mumbai - Punjab face face-to-face confrontation
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டம் மும்பை இண்டியன்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் இடையே மும்பையில் இன்று நடக்கிறது.
புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் அணி. இந்த ஆட்டத்தில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.
அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முன்னணி தொடக்க வீரரான ஹஷிம் ஆம்லா, அவருடைய தாய் நாட்டு அணிக்காக விளையாட சென்றுவிட்டார். இது அந்த அணிக்கு பின்னடைவாகும்.
இருப்பினும், மனன் வோரா, மார்ட்டின் கப்டில், ஷான் மார்ஷ், கேப்டன் மேக்ஸ்வெல், ரித்திமான் சாஹா போன்ற பேட்ஸ்மேன்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் சந்தீப் சர்மா, மோஹித் சர்மா, மட் ஹென்றி கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அக்ஷர் படேலையும் நம்பியுள்ளது பஞ்சாப்.
மும்பை அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. மேலும் இந்த சீசனில் மும்பை அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் கடைசி லீக் ஆட்டம் இது. அந்த அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ளது.
பேட்டிங்கைப் பொறுத்தவரையில் பார்த்திவ் படேல், சிம்மன்ஸ், நிதிஷ் ராணா, கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் போலார்ட், ஹார்திக் பாண்டியா என வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
வேகப்பந்து வீச்சில் மெக்லீனாகான் - ஜஸ்பிரித் பூம்ரா கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன் சிங்கும் மும்பை அணிக்கு சேர்க்கிறார்கள்.
மும்பையும், பஞ்சாபும் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை 10 வெற்றிகளையும், பஞ்சாப் 9 வெற்றிகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
