ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களை முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி, அடுத்ததாக இந்தியாவிற்கு வரும் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுகிறது. 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்க உள்ளது. முதலில் டி20 தொடர் நடக்க உள்ளது. முதல் போட்டி வரும் 24ம் தேதியும் இரண்டாவது டி20 போட்டி வரும் 27ம் தேதியும் நடக்க உள்ளது. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 13ம் தேதி வரை நடக்க உள்ளது.

கடந்த 15ம் தேதி ஆஸ்திரேலிய தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களுக்குமான அணிகளும் அறிவிக்கப்பட்டன. இதில் டி20 அணியில் இளம் ரிஸ்ட் ஸ்பின்னர் மயன்க் மார்கண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிய மார்கண்டே சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 14 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின்னர் ரஞ்சி டிராபியிலும் சிறப்பாக வீசினார். அண்மையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆடிய மார்கண்டே, கடைசி டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற உதவினார். 

இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிவந்த மார்கண்டேவிற்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தான் அணியில் சேர்க்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த மார்கண்டே, உண்மையாகவே இவ்வளவு விரைவில் நான் இந்திய அணிக்கு அழைக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. உண்மையாகவே நான் பெரிய அதிர்ஷ்டசாலிதான் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

மார்கண்டேவை தேர்வு செய்தது குறித்து கருத்து தெரிவித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், டி20 தொடரில் குல்தீப் யாதவ் இல்லாத நிலையில், சாஹல் மற்றும் குருணல் பாண்டியாவிற்கு பேக்கப் ஸ்பின்னராக மார்கண்டே சேர்க்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.