ஷிகர் தவானின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது. 

இதில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான், முரளி விஜய், கருண் நாயர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு பதிலாக பிரித்வி ஷா, மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்த ஷிகர் தவான், இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சொதப்பினார். இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் ஆடிய தவான், 8 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே வெறும் 162 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆசியாவிற்குள் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 16 போட்டிகளில் 6 சதங்களுடன் 61 சராசரியை பெற்றுள்ள தவான், ஆசியாவிற்கு வெளியே 18 போட்டிகளில் வெறும் 26 சராசரியை மட்டுமே பெற்றுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அணி தேர்வு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டதால், தவானுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சொதப்பிய தவான், ஆசிய கோப்பையில் அதற்கு நேர்மாறாக ஆடினார். ஆசிய கோப்பை தொடர் முழுவதுமே அபாரமாக ஆடிய தவான், தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆனாலும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஷிகர் தவான் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், ஷிகர் தவானின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடவில்லை. அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்பட்ட பிறகே, கனத்த இதயத்துடன் தான் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவரை தேர்வு செய்யவில்லை. ஆனாலும் அவருக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடும் தவான், டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்புகிறார். ஆனாலும் டெஸ்ட் அணியில் அவருக்கான கதவு திறந்தே இருக்கிறது என எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.