ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ள நிலையில், மூன்றாவது போட்டி நாளை மெல்போர்னில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பிவந்த தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவருமே அடுத்த போட்டியில் அதிரடியாக நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மயன்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

மூன்றாவது போட்டியில் மயன்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க உள்ளனர். ஹனுமா விஹாரி மிடில் ஆர்டரில் ஏற்கனவே சிறப்பாக ஆடிவருகிறார். அவரது பேட்டிங் டெக்னிக் சிறப்பக இருப்பதாலும் ஓபனிங் பார்ட்னர்ஷிப் முக்கியம் என்பதால் மயன்க் அகர்வாலுடன் நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்டிருக்கும் ஹனுமா விஹாரி தொடக்க வீரராக களமிறக்கப்பட உள்ளார். 

நாளை மூன்றாவது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில், தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், ஒருவேளை ஹனுமா விஹாரி தொடக்க வீரராக சோபிக்கவில்லை என்றால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த எம்.எஸ்.கே.பிரசாத், ஹனுமா விஹாரியின் பேட்டிங் டெக்னிக் நன்றாக உள்ளது. அவர் ஒருவேளை அடுத்த இரண்டு போட்டிகளிலும் தொடக்க வீரராக சோபிக்காவிட்டால், மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படுவார். ஆனால் அவரது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதாக பிரசாத் நம்பிக்கை வார்த்தைகளை கூறினார்.