தோனி எப்போதும் என்னைவிட சிறந்தவர், அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறார், நான் படிக்கும் பல்கலைக் கழகத்தில் தோனிதான் டாப்பர்! என்று தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார். 

நிடஹாஸ் கோப்பை இறுதிப்போட்டியின் கடைசிப் பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு இந்தியாவை ஜெயிக்கவைத்தார் தினேஷ் கார்த்திக். அந்த ஒரு ஆட்டமே அவர்மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. அதேசமயம், பெஸ்ட் ஃபினிஸர் என்று புகழப்படும் தோனிக்கு மாற்று இவர்தான் என்றும் சொல்லாதவர்கள் இல்லை. தோனிக்கு முன்பாகவே இந்திய அணியில் இடம்பிடித்தவர் தினேஷ்கார்த்திக். 32 வயதாகும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால், களத்தில் தன்னை நிரூபிக்க இத்தனை காலம் தேவைப்பட்டிருக்கிறது. 

இலங்கையில் நடந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் மிரட்டலான ஆட்டத்தால், வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. 

இரண்டு ஓவருக்கு 34 ரன்கள் என்ற இக்கட்டான நிலை இருந்தது. 19வது ஓவரில் 22 ரன்கள் குவித்தார் தினேஷ் கார்த்திக். கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்திய ரசிகர்களை மட்டுமல்லாது, வங்கதேசத்துக்கு எதிரான இலங்கை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் தினேஷ் கார்த்திக்.

போட்டிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக்கிடம் தோனியோடு ஒப்பீடு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ‘நான் படித்துக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்தில் தோனிதான் டாப்பர். எனவே, என்னையும், அவரையும் ஒப்பிடுவதே ஏற்றுக்கொள்ள முடியாதது. நான் என் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினேன். இந்த வெற்றி புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. அதேசமயம், தோனியின் பயணம் முற்றிலும் மாறுபட்டது. இதுபோன்ற ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க தோனியின் ஆட்டங்கள் சிறந்த உதாரணங்கள். நெருக்கடி நிலைகளை கையாள்வதை தோனி போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.