தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், வரும் ஆஸ்திரேலிய தொடருடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். 

2006ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார் மோர்னே மோர்கல். தென்னாப்பிரிக்கா அணிக்கு கடந்த 12 ஆண்டுகளாக தனது பங்களிப்பை அளித்து வந்துள்ளார் மோர்கல்.

83 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 294 விக்கெட்டுகளையும் 117 ஒருநாள் ஆடி 188 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் மோர்கல். 33 வயதான மோர்கல், பவுலிங்கில் மட்டுமல்லாது பேட்டிங்கிலும் தனது சிறப்பான பங்களிப்பை பல நேரங்களில் தென்னாப்பிரிக்க அணிக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், வரும் ஆஸ்திரேலிய தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற மோர்கல் முடிவு செய்துள்ளார். பெரும்பாலான காலம் தனது குடும்பத்தை பிரிந்து செல்வதால் அழுத்தம் அதிகரிப்பதாகவும், குடும்பத்தினருடன் நேரம் செலவிடமுடியவில்லை என்பதாலும் ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளதாக மோர்கல் தெரிவித்துள்ளார்.