தன் மனைவியின் மூலம் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், சூதாட்டப் புகார் ஒன்றையும் கூறி பரபரப்பை கிளப்பினார். 

இதனால், இருவருக்கும் இடையிலான கருத்து மோதல் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷமி மீதான சூதாட்டப் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை என கூறி பிரச்னையை பிசிசிஐ முடித்து வைத்தது. ஆனாலும் இருவர் இடையிலான குடும்ப பிரச்னை மட்டும் தொடர்ந்து வருகிறது. இதையடுத்து இருவரும் பிரிந்திருக்கின்றனர்.

இந்நிலையில், மனைவி மூலம் உயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அம்ரோகா மாவட்ட ஆட்சியரிடம் ஷமி கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை ஏற்ற மாவட்ட ஆட்சியர் ஹேமந்த் குமார் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறியுள்ளார். விண்ணப்ப நடைமுறைகள் முடிவடைந்ததும், ஷமிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷமி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட தயாராகிவருகிறார்.