வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியின் அனுபவ ஸ்பின்னர்களான ரவிச்சந்திரன் அஷ்வினும் ரவீந்திர ஜடேஜாவும் அந்த அணிக்கு சவாலாக திகழ்வார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த இளம் வீரர் பிரித்வி ஷா, முதல் போட்டியில் ஆட வாய்ப்பு பெற்றுள்ளார். இந்த போட்டியில் அஷ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு பவுலிங் ஆல்ரவுண்டர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். மேலும் உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அஷ்வின், ஜடேஜா தவிர மற்றொரு ஸ்பின்னரான குல்தீப் யாதவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அஷ்வினும் ஜடேஜாவும் மீண்டும் ஒன்றாக டெஸ்ட் போட்டியில் ஆடுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு முகமது கைஃப் அளித்த பேட்டியில், சொந்த மண்ணில் வலுவான இந்தியாவை எதிர்கொள்வது வெஸ்ட் இண்டீஸிற்கு மிகவும் சவாலான விஷயம். இந்த தொடரில் மேட்ச் வின்னர்கள் என்றால் அது அஷ்வினும் ஜடேஜாவுமாகத்தான் இருப்பார்கள். இருவரும் இணைந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள். குல்தீப் யாதவ் நல்ல ஸ்பின்னர் தான் என்றாலும் அஷ்வினும் ஜடேஜாவும் தான் மேட்ச் வின்னர்களாக இருப்பார்கள் என முகமது கைஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.