michael clarke surprised by kohli decision to skip afghanistan test
முழுநேர டெஸ்ட் அணி அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, ஜூன் 14ம் தேதி, முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் ஆடுகிறது. இந்த போட்டியில் கோலி ஆடவில்லை. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடுவதற்காக, அங்கு நடக்கும் கவுண்டி போட்டியில் சர்ரே அணிக்காக கோலி ஆடுகிறார்.
கவுண்டி போட்டிகளில் கோலி ஆட இருப்பதால், ஆஃப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், விராட் கோலியின் முடிவு ஆச்சரியமாக இருக்கிறது. நாட்டுக்காக டெஸ்ட் போட்டியில் ஆடுவதுதான் முக்கியம். டெஸ்ட் போட்டி, டெஸ்ட் போட்டிதான். யாருடன் விளையாடுகிறோம் என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை. டெஸ்ட் போட்டிக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
கவுண்டி கிரிக்கெட்டில் சிறிது காலம் இடைவெளி கிடைத்தால் கூட, கோலி டெஸ்ட் போட்டியில் விளையாடிவிட்டு அங்கு செல்ல வேண்டும். நான் விளையாடிய காலம் முழுவதும் நாட்டுக்காக ஆடுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். அதற்காக மற்ற போட்டிகளில் விளையாடும் பல வாய்ப்புகளை தவிர்த்திருக்கிறேன். நாட்டுக்காக ஆடுவதுதான் மற்ற அனைத்தையும் விட சிறப்பானது. கவுண்டி போட்டிகளில் கோலி ஆட செல்வதன் மூலம், இங்கிலாந்து தொடரை வெல்ல வேண்டும் என்ற கோலியின் தாகத்தை உணரமுடிகிறது. இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் அவர் கவுண்டி போட்டிகளில் பங்கேற்கிறார். எனினும் நாட்டுக்காக ஆடுவதுதான் அனைத்தையும் விட முக்கியமானது என மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
