எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் ஓஎன்ஜிசி மற்றும் பெங்களூரு ஹாக்கி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

91-வது எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் எட்டாவது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஓஎன்ஜிசி அணியும், மத்திய செகரட்டரியேட் அணியும் மோதின.

இதில், 2-0 என்ற கோல் கணக்கில் மத்திய செகரட்டரியேட் அணியைத் தோற்கடித்து வெற்றி பெற்றது ஓஎன்ஜிசி அணி.

இந்த வெற்றியின் மூலம் ஒன்பது புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்த ஓஎன்ஜிசி அணி அரையிறுதியை உறுதி செய்தது.

மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியும், பெங்களூரு ஹாக்கி அணியும் மோதின.

இதில், 1-0 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஹாக்கி அணியைத் தோற்கடித்து வெற்றிப் பெற்றது தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி,.

'ஏ' பிரிவில் தமிழ்நாடு அணியும், பெங்களூரு அணியும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தன. எனினும் கோல் வித்தியாச அடிப்படையில் 'ஏ' பிரிவில் 2-வது இடத்தைப் பிடித்த பெங்களூரு அணி, அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது.

நேற்றோடு குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. நாளை ஓய்வு நாளாகும். சனிக்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியன் இரயில்வே - ஓஎன்ஜிசி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.