MCC - Murugappa hockey teams that adavanced for the next round...

எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி, இந்தியன் இரயில்வே அணி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 7-வது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியும், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியும் மோதின.

தமிழகம் தரப்பில் வீரத் தமிழன் இரு கோல்களையும், சரவணக்குமார் ஒரு கோலையும் அடித்தனர்.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி தரப்பில் ஜஸ்கரன் சிங், ககன்பிரீத் சிங் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

இதன்படி, 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி அணியைத் தோற்கடித்தது தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணி.

பின்னர் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்தியன் ரயில்வே அணியும், பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) அணியும் மோதின.

இதில், இந்தியன் ரயில்வே தரப்பில் அஜீத் குமார், மாலக் சிங், அஜ்மீர் சிங், ராஜூ பால் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

பிபிசிஎல் தரப்பில் அபிஷேக், தேவிந்தர் வால்மீகி ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

இதன்படி 4-2 என்ற கோல் கணக்கில் பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) அணியைத் தோற்கடித்தது இந்தியன் ரயில்வே அணி.

மூன்றாவது ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், இராணுவ லெவன் அணியும் மோதியதில் 3-0 என்ற கோல் கணக்கில் இராணுவ லெவன் அணியைத் தோற்கடித்தது. பஞ்சாப் நேஷனல் வங்கி அணி.