எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் 4-வது நாள் நடைபெற்ற ஆட்டங்களில் முதலாட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியும், இரண்டாவது ஆட்டத்தில் இராணுவ லெவன், மூன்றாவது ஆட்டத்தில் ஹாக்கி பெங்களூரு அணிகள் வெற்றி அடைந்தன.

91-வது எம்சிசி மற்றும் முருகப்பா தங்கக் கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் 4-வது நாளான நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி அணியும், ஹாக்கி ஒடிஸா அணியும் மோதின.

இதில், பஞ்சாப் அணி தரப்பில் ககன்தீப் சிங், குருஜிந்தர் சிங் ஆகியோர் தலா இரு கோல்களையும், ஹர்தீப் சிங், சுமீத் டாப்போ ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

ஒடிஸா அணி தரப்பில் ஆசிஷ் டோப்னோ, மணீப் கெர்கெட்டா ஆகியோர் தலா ஒரு கோலை அடித்தனர்.

இறுதியில் 6-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி ஒடிஸா அணியைத் தோற்கடித்தது பஞ்சாப் நேஷனல் வங்கி.

இரண்டாவது ஆட்டத்தில் இராணுவ லெவன் அணியும், மத்திய செகரட்டரியேட் அணியும் மோதின. இதில், இராணுவ லெவன் அணி தரப்பில் சிராஜூ, மச்சையா ஆகியோர் தலா ஒரு கோலையும், செகரட்டரியேட் தரப்பில் சிவமணி ஒரு கோலையும் அடித்தனர். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் மத்திய செகரட்டரியேட் அணியைத் தோற்கடித்தது. இராணுவ லெவன் அணி.

மூன்றாவது ஆட்டத்தில் ஹாக்கி பெங்களூரு அணியும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணியும் மோதியதில் பெங்களூரு தரப்பில் ரகுநாத் இரு கோல்களையும், ராஜ்குமார், பிஜு இர்கால் ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர்.

பிபிசிஎல் தரப்பில் இம்ரான் கான், ஜர்னைல் சிங், ஆனந்த் ராய் ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) அணியைத் தோற்கடித்தது ஹாக்கி பெங்களூரு அணி.