ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் அறிமுகமான மயன்க் அகர்வால் அருமையாக ஆடிவருகிறார். அரைசதம் கடந்த அவர், சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனான நிலையில், மூன்றாவது போட்டி மெல்போர்னில் இன்று காலை இந்திய நேரப்படி 5 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டியில் அறிமுகமாகும் மயன்க் அகர்வாலும் ஹனுமா விஹாரியும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிதானமாக தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹனுமா விஹாரி 8 ரன்களில் பாட் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து மயன்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். விஹாரி ஆட்டமிழந்தாலும் அகர்வால் மிகவும் நிதானமாக ஆடினார். ராகுல் - முரளி விஜய் தொடக்க ஜோடி கடும் ஏமாற்றமளித்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பு மற்றும் நெருக்கடிக்கு இடையே இந்த போட்டியில் அறிமுகமான அகர்வால், பதற்றப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் தொடங்கினார். அதே நிதானத்தையும் தெளிவையும் தொடர்ந்து கடைபிடித்து அறிமுக போட்டியிலேயே அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடி சதத்தை நோக்கி சென்ற மயன்க் அகர்வால், டீ பிரேக் விடப்போகும் நேரத்தில் தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்தார். 76 ரன்களில் ஆட்டமிழந்த அகர்வால் சதத்தை தவறவிட்டார். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய புஜாராவும் 30 ரன்களை கடந்து களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் நாள் டீ பிரேக் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 123  ரன்கள் எடுத்துள்ளது.