மயன்க் அகர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ஆடிவருகிறார். கர்நாடக வீரரான மயன்க் அகர்வால், இந்தியா ஏ அணியிலும் முதல்தர போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவருகிறார். 

கடந்த ஆண்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் ஆடிய மயன்க், 4 போட்டிகளில் 287 ரன்களை குவித்து டாப் ஸ்கோரராக திகழ்ந்தார். அதேபோல் உள்நாட்டு முத்தரப்பு தொடரில் இந்தியா பி அணியில் ஆடிய மயன்க், 59 சராசரியுடன் 236 ரன்களை குவித்திருந்தார். 

லிஸ்ட் ஏ போட்டிகளில் 48.71 சராசரியுடன் 3605 ரன்களை குவித்துள்ள மயன்க், ஒரு சதம் மற்றும் 15 அரைசதங்களுடன் டி20 போட்டிகளில் 2340 ரன்களை குவித்துள்ளார். தொடர்ந்து உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடியதை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நன்றாக ஆடினார். 

டெஸ்ட் அணியில் இடம்பிடித்துவிட்ட மயன்க், ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் இடம்பிடிப்பதில் தீவிரமாக உள்ளார். இதுகுறித்து பேசியுள்ள மயன்க், மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்கு ஆடவேண்டும் என்பதுதான் இலக்கு. ஒருநாள் அணியில் ஆடும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அந்த வாய்ப்பு கிடைத்தால் அதை இரண்டு கைகளிலும் இறுக்க பற்றிக்கொள்வேன். மூன்று விதமான போட்டிகளிலும் என்னால் சிறப்பாக ஆடமுடியும். எந்த போட்டியாக இருந்தாலும் ஆடுவதற்கான பேசிக் ஒன்றுதான். ஆனால் போட்டி மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு ஆடுவதுதான் முக்கியம் என்று மயன்க் அகர்வால் தெரிவித்துள்ளார்.

உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில், உலக கோப்பைக்கு பிறகான ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஒருநாள் அணியில் நிரந்தர இடத்தை பிடிக்கும் முனைப்பில் மயன்க் உள்ளார்.