ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, வெறும் 126 ரன்களை மட்டுமே எடுத்தது. 127 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 5 ரன்களுக்கு உள்ளாக இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோதிலும் மேக்ஸ்வெல்லும் ஷார்ட்டும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். 

அரைசதம் அடித்த மேக்ஸ்வெல் ஆட்டமிழந்ததும், ஷார்ட்டும் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. அதன்பிறகு மளமளவென விக்கெட்டுகளை சரித்த இந்திய பவுலர்கள், ரன்கள் வழங்காமல் கட்டுக்கோப்பாக வீசினர். கடைசி 2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, 19வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 

எனினும் பும்ராவின் கடுமையான உழைப்பை கடைசி ஓவரில் நாசமாக்கினார் உமேஷ் யாதவ். ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கடைசி ஓவரில் 14 ரன்களை கொடுக்காமல் கட்டுப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடித்தந்திருக்க வேண்டிய நிலையில், கடைசி ஓவரில் தவறான பந்துகளை அலட்சியமாக வீசி ரன்களை வாரி வழங்கி அணிக்கு தோல்வியை தேடித்தந்தார் உமேஷ் யாதவ். 

கடைசி ஓவரில் ரிச்சர்ட்ஸன் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகிய இருவரும் தலா ஒரு பவுண்டரியை அடித்தனர். 2 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், ஐந்தாவது பந்தை பவுண்டரி அடித்தார் கம்மின்ஸ். கடைசி பந்தில் 2 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய அணியை கம்மின்ஸ் வெற்றி பெற செய்தார். 

போட்டிக்கு பின்னர் இதுகுறித்து பேசிய மேக்ஸ்வெல், இக்கட்டான கடைசி நேரத்தில், கம்மின்ஸால் அடித்து ஆடி அணிக்கு வெற்றியை தேடித்தர முடியும் நம்பிக்கையுடன் கேப்டன் ஃபின்ச்சிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.