ஆஸ்திரேலிய அணியை பேபி சிட்டர்களாக சித்தரித்து உருவாக்கப்பட்ட விளம்பரத்தில் சேவாக் நடித்ததை பார்த்து ஆத்திரமடைந்த மேத்யூ ஹைடன், இந்திய அணியை எச்சரித்துள்ளார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக உள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள 2 அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்திய அணி வலுவாக திகழும் அதேவேளையில், 5 முறை உலக கோப்பையை வென்ற நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தொடர் தோல்விகளை தழுவி துவண்டு போயுள்ளது. அண்மையில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிய இந்திய அணி, டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்று அசத்தியது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் ஸ்லெட்ஜிங்குகள் படுபயங்கரமாக இருந்தன. வழக்கமாக ஆஸ்திரேலிய வீரர்கள்தான் ஸ்லெட்ஜிங் செய்வார்கள். ஆனால் இந்த முறை இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததோடு, சரியான நேரங்களில் ஆஸ்திரேலிய வீரர்களை சீண்டினர். 

அந்த தொடரில் நடந்த ஸ்லெட்ஜிங்களிலேயே மிகவும் பிரபலபமானது என்றால் ரிஷப் பண்ட் - டிம் பெய்ன்  இடையேயானதுதான். நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு சினிமாவிற்கு செல்லும்போது, நீ என் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பேபி சிட்டராக இரு என்று ரிஷப் பண்ட்டை டிம் பெய்ன் ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு, டிம் பெய்னை தற்காலிக கேப்டன் என்று பதிலடி கொடுத்த ரிஷப் பண்ட், டிம் பெய்னின் குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்தும் பதிலடி கொடுத்தார். 

அதுமுதல் பேபி சிட்டர் என்ற வார்த்தையும் விஷயமும் பிரபலமடைந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. வரும் 24ம் தேதி முதல் டி20 போட்டியும் 27ம் தேதி இரண்டாவது டி20 போட்டியும் நடக்க உள்ளது. அதன்பிறகு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. 

இந்த தொடரை ஒளிபரப்ப இருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, அந்த தொடருக்கான புரமோஷனுக்காக ஒரு விளம்பரத்தை தயார் செய்து ஒளிபரப்பிவருகிறது. அதில், நிறைய குழந்தைகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் உடையை அணியவைத்து, அந்த குழந்தைகளை சேவாக் பார்த்துக்கொள்வது போன்று உருவாக்கியுள்ளது. 

இதைக்கண்ட ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அதிரடி வீரர் மேத்யூ ஹைடன், இந்த விளம்பரம் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட்டு அசிங்படுத்துவது போல் உள்ளது என்பதை உணர்ந்து, இந்திய அணிக்கும் சேவாக்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட்டு காமெடி பண்ணாதீர்கள். யார் பேபி சிட்டர்கள் என்பது உலக கோப்பையில் தெரியும் என்று காட்டமாக டுவீட் செய்துள்ளார்.