Mary Kom resigned as National Inspector Sports Minister is responsible for ...
குத்துச்சண்டைக்கான தேசிய கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்து மேரி கோம் ராஜிநாமா செய்துள்ளார். குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் இந்தப் பொறுப்பை வகிக்கக் கூடாது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவுறுத்தியதால் இந்த முடிவை எடுத்துள்ளார்.
குத்துச்சண்டையில் ஐந்து முறை உலக சாம்பியன்ஷிப் வென்ற மேரி கோம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "குத்துச் சண்டைக்கான தேசிய கண்காணிப்பாளர் பொறுப்பை கடந்த பத்து நாள்களுக்கு முன்பு ராஜிநாமா செய்துவிட்டேன்.
குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் இந்தப் பொறுப்பை வகிக்கக் கூடாது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ரத்தோர் அறிவுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பை ராஜிநாமா செய்துவிட்டேன். இந்தப் பொறுப்பை நான் கேட்டுப் பெறவில்லை. விளையாட்டுத் துறை அமைச்சகமே முன்வந்தது அளித்த காரணத்தால் ஏற்றுக் கொண்டேன்" என்று அவர் தெரிவித்தார்.
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சராக விஜய் கோயல் இருந்தபோது, கடந்த மார்ச் மாதம், பல்வேறு விளையாட்டுகளுக்காக மேரி கோம் உள்பட 12 தேசிய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களில், ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதலில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் அகில் குமார் உள்ளிட்டோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
