ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் பிடித்த அபாரமான கேட்ச் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கேட்ச் ரசிகர்களை மட்டுமல்லாது பாகிஸ்தான் அணி வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 

இதையடுத்து அபுதாபியில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 282 ரன்களும் ஆஸ்திரேலிய அணி 145 ரன்களும் எடுத்தது. 

137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் 281 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முதல் இன்னிங்ஸின் போது அந்த அணியின் தொடக்க வீரர் முகமது ஹஃபீஸை வியக்கத்தகு கேட்ச் ஒன்றை பிடித்து வெளியேற்றினார் மார்னஸ். மிட்செல் ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை ஹஃபீஸ் அடிக்க, ஷார்ட் லெக் திசையில் ஸ்லிப்பில் நின்ற மார்னஸின் இடது தொடையில் அடித்து பந்து கீழே விழப்போகும் நேரத்தில் வலது காலில் பட்டது. பின்னர் சுதாரித்த இரண்டு கால்களையும் சேர்த்து வைத்து பந்தை பிடித்துவிட்டார். கையில் தான் கேட்ச் பிடித்து பார்த்திருப்போம். ஆனால் மார்னஸ் கால்களிலேயே பிடித்த கேட்ச், ரசிகர்களை மட்டுமல்லாமல் பாகிஸ்தான் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.