mark waugh slams selfish india over day night test issue
சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஆடமறுக்கிறது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது. இந்நிலையில், அடிலெய்டில் நடக்க இருக்கும் டெஸ்ட் போட்டியை பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.
ஆனால், பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்திய அணிக்கு குறைந்தது 18 முதல் 20 மாதங்கள் தேவை என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததை அடுத்து, பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது. மேலும் வழக்கம்போல பகல் ஆட்டமாகவே நடத்த வலியுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வழக்கம்போலவே அடிலெய்டு டெஸ்டையும் நடத்த ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மார்க் வாஹ், நலிந்துவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புத்துணர்வு கொடுக்க வேண்டியிருக்கிறது. அதற்கு பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதும் அவசியம். டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்பிக்க பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஆட வேண்டும். ஆனால் இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆட மறுப்பதில் சுயநலமும் இருக்கிறது. மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களையும் நல்ல வேகப்பந்து மற்றும் ஸ்பின் பவுலர்களையும் தன்னகத்தே கொண்டு சிறந்த அணியாக திகழும் இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டியை ஆட மறுக்கிறது என மார்க் வாஹ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
