ஆஸ்திரேலிய வீரர்களை அச்சுறுத்தும் விதமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மிரட்டலாக வீசிவருகின்றனர். ஆரோன் ஃபின்ச்சின் கையை ஷமி பதம் பார்த்த நிலையில், மார்கஸ் ஹாரிஸின் மண்டையை பும்ரா பதம்பார்த்தார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 326 ரன்களும் இந்திய அணி 283 ரன்களும் எடுத்தன. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளை இந்திய பவுலர்கள் பெரிய சிரமமின்றி வீழ்த்திவிட்ட நிலையில், கவாஜா - டிம் பெய்ன் ஜோடியை பிரிக்க முடியாமல் திணறினர். பின்னர் அவர்களையும் ஷமி வீழ்த்தி பிரேக் கொடுத்தார். இதையடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. 

இந்த போட்டியில் இந்திய பவுலர்கள் மிகவும் ஆக்ரோஷமாக பந்துவீசிவருகின்றனர். வழக்கமாக ஆஸ்திரேலிய பவுலர்கள் தான் இதுபோன்று ஆக்ரோஷமாக பந்துவீசுவார்கள். ஆனால் தற்போது மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு யூனிட்டை பெற்றிருக்கும் இந்திய அணியின் பவுலர்கள் அனல் பறக்க வீசுகின்றனர். மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஃபின்ச்சுக்கு ஷமி வீசிய பவுன்சர், கையை பதம்பார்த்தது. இதையடுத்து அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். பின்னர் 5 விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். 

ஃபின்ச்சிற்காவது கையில் அடிபட்டது. அவரது ஓபனிங் பார்ட்னரான மார்கஸ் ஹாரிஸின் தலையையே பதம் பார்த்தார் பும்ரா. பும்ரா வீசிய பவுன்ஸர் மார்கஸ் ஹாரிஸின் ஹெல்மெட்டில் அடிக்க நிலைகுலைந்து கீழே விழுந்தார் ஹாரிஸ். பும்ராவின் இந்த பவுன்ஸரில் அடி வாங்கிய ஹாரிஸின் ஹெல்மெட் விரிசல் விட்டது. அந்தளவிற்கு ஆக்ரோஷமான பந்து அது. இந்திய பவுலர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற பல மிரட்டலான பந்துகளை வீசிவருகின்றனர். மார்கஸ் ஹாரிஸின் மண்டையை பதம்பார்த்த பும்ராவின் பவுன்ஸர் வீடியோ இதோ..