Manpreet Singh is the captain of the 18-member Indian team.
ஜெர்மனியில் நடைபெற இருக்கும் மூன்று நாடுகள் வலைகோல் பந்தாட்டப் போட்டி, மற்றும் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக வலைகோல் பந்தாட்ட லீக் அரையிறுதி ஆகியவற்றில் பங்கேற்கவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஜெர்மனியில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்கவுள்ள மூன்று நாடுகள் ஹாக்கிப் போட்டியில் இந்தியா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
அதைத் தொடர்ந்து ஜூன் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் இந்திய அணி 'பி', நெதர்லாந்து, கனடா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
அணி தேர்வு குறித்து தலைமைப் பயிற்சியாளர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் பேசியது:
“அஸ்லான் ஷா கோப்பை போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் வீரர்களின் வரிசையில் (பொசிஷன்) சில மாற்றங்களை செய்வது என்ற முடிவுக்கு வந்தோம். ஏற்கெனவே சொன்னதைப் போல இந்த ஆண்டில் 3 தொடர்களில் விளையாடுகிறோம். அதனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம்.
தற்போதைய நிலையில் அனுபவமில்லாத வீரர்களை அணியில் சேர்த்திருந்தாலும், உலக ஹாக்கி லீக் அரையிறுதியில் முதல் 2 இடங்களில் ஒன்றை பிடிக்க விரும்புகிறோம்.
பெரிய அணிகளுக்கு எதிராக இளம் வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறோம்' என்று பேசினார்.
அணி விவரம்:
முன்களம்: ரமன்தீப் சிங், எஸ்.வி.சுநீல், தல்விந்தர் சிங், மன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங்.
நடுகளம்: சிங்லென்சனா சிங் (துணை கேப்டன்), எஸ்.கே.உத்தப்பா, சத்பிர் சிங், சர்தார் சிங், மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்ஜீத் சிங்.
பின்களம்: பிரதீப் மோர், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், ரூபிந்தர் பால் சிங், ஹர்மான்பிரீத் சிங்.
கோல் கீப்பர்கள்: ஆகாஷ் சிக்டே, விகாஸ் தாஹியா.
இந்திய அணியின் கேப்டனும், கோல் கீப்பருமான ஸ்ரீஜேஷ் காயம் காரணமாக விலகியதைத் தொடர்ந்து புதிய கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
