இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கெளர், டைமெத்தில்புட்டிலமைன் என்ற ஊக்கமருந்தை 2-வது முறையாக பயன்படுத்தியதன் காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய கிராண்ட்ப்ரீ தடகளப் போட்டி கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி சீனாவின் ஜின்ஹுவாவில் நடைபெற்றது. இதில் தங்கம் வென்ற மன்பிரித் கெளர், உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றிருந்தார்.

ஆனால் அந்தப் போட்டியின்போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் மன்பிரீத் கெளர் டைமெத்தில்புட்டிலமைன் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த ஜூனில் 1 முதல் 4-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை போட்டியின்போது ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது.

அப்போது மன்பிரீத் கெளரிடம் பெறப்பட்ட சிறுநீர் மாதிரியை சோதனை செய்தபோது, அதிலும் டைமெத்தில்புட்டிலமைன் என்ற மருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

விளையாட்டு வீரர்கள் சில நேரங்களில் வேறு ஏதாவது பிரச்சனைக்காக மருந்து எடுக்கும்போது, அதன் மூலம் டைமெத்தில்புட்டிலமைன் உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில் முதல்முறையாக மன்பிரீத் கெளர் சிக்கியபோது அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் 2-வது முறையாக அவர் சிக்கியிருப்பதால், அவர் வேண்டுமென்ற அந்த மருந்தை எடுத்திருக்கலாம் என்ற அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அடுத்த மாதம் இலண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார் மன்பிரீத் கெளர்.

இதுதவிர மன்பிரீத் கெளரின் 'பி' மாதிரியை சோதனைக்கு உட்படுத்தும்போது, அதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 4 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுதவிர சமீபத்தில் ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தையும் அவர் இழக்க நேரிடும்.