சமீபத்தில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கெளர் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 1 முதல் 4-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற
ஃபெடரேஷன் கோப்பை போட்டியின்போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையின்போது மன்பிரீத் கெளரிடம் பெறப்பட்ட சிறுநீர் மாதிரி, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் டைமெத்தில் புட்டிலமைன் என்ற வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மன்பிரீத் கெளரின் 'பி' மாதிரி சோதனையின்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால், அவர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற தங்கப் பதக்கத்தை இழக்க நேரிடும்.

இது தொடர்பாக மன்பிரீத் கெளரின் கணவரும், பயிற்சியாளருமான கரம்ஜீத்திடம் கேட்டபோது, 'ஊக்கமருந்து சோதனை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.

2010-ல் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல் போட்டிக்கு முன்பு வரை டைமெத்தில் புட்டிலமைனை அனைத்து வீரர், வீராங்கனைகளும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அதை பயன்படுத்தியதாக பிடிபட்டுள்ள முதல் நபர் மன்பிரீத் கெளர்தான் என இந்திய தடகள சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அடுத்த மாதம் இலண்டனில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மன்பிரீத் கெளர் தகுதி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கியிருப்பதால் அவர் உலக தடகள சாம்பின்ஷிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.