List of progressing to the next round of the Miami Masters tennis

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், ஏஞ்ஜெலிக் கெர்பர் உள்ளிட்ட அதிரடி வீரர்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் ஸ்பெயினின் நடால் 0-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபரை வீழ்த்தினார்.

நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸின் நிகோலஸ் மஹத்தை சந்திக்கிறார்.

மஹத் தனது 3-ஆவது சுற்றில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் குய்டோ பெல்லாவை வீழ்த்தினார்.

ஜப்பானின் நிஷிகோரி 7-6 (2), 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தினார்.

நிஷிகோரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஃபெடரிக்கோ டெல் போனிஸை எதிர்கொள்கிறார்.

மகளிர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஷெல்லி ரோஜர்ஸை வெற்றிக் கண்டார்.

பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டா 6-4, 6-0 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் பாலின் பார்மென்டியரையும், ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-4, 6-2 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர் டெளன்சென்டையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தேர்வானார்.

அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் பேட்ரிசியா டிக்கையும், ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்டையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.