தன் கிரிக்கெட் வாழ்க்கையை காப்பாற்றியதே இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் விவிஎஸ் லட்சுமணன் தான் என முன்னாள் கேப்டன் கங்குலி மனம் திறந்துள்ளார்.

ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 2001ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதையடுத்து கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணி வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ராகுல் டிராவிட் மற்று லட்சுமணன் இணைந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து இமாலய ஸ்கோரை எட்ட உதவினர். அபாரமாக ஆடிய லட்சுமணன் 281 ரன்களையும் ராகுல் டிராவிட் 180 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்களை குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. ஆனால் 212 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்ததால் இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னையில் நடந்த மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியது. 

ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் அபார வெற்றி பெறவைத்த லட்சுமணனின் இன்னிங்ஸ் காலத்தால் அழியாதது. அந்த இன்னிங்ஸ் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமானது. எனவே அந்த பெயரிலேயே அவரது சுயசரிதை வெளியிடப்பட்டது. 281 அண்ட் பியாண்ட் என்ற பெயரில் அவரது சுயசரிதை வெளியிடப்பட்டது. 

அதன் வங்கப்பதிவை வெளியிட்டு பேசிய முன்னாள் கேப்டன் கங்குலி, இந்த நூலிற்கு 281 அண்ட் பியாண்ட் என்று பெயரிடப்பட்டதில் உடன்பாடில்லை. உண்மையாகவே ”281 அண்ட் பியாண்ட் அண்ட் சேவ்டு கங்குலி” என்றுதான் பெயரிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்த போட்டியில் லட்சுமணன் காப்பாற்றியது இந்திய அணியை மட்டுமல்ல; எனது கிரிக்கெட் வாழ்க்கையையும் சேர்த்துத்தான் காப்பாற்றினார். 

இந்திய கிரிக்கெட்டில் சூதாட்டப் புகார் எழுந்து அடங்கியிருந்த நேரத்தில் நான் கேப்டனாக பதவியேற்றேன். மும்பையில் நடந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தோம். கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது போட்டியில் லட்சுமணன் - ராகுல் டிராவிட் கூட்டணி சேர்த்த ரன்கள்தான் இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டு வெற்றி பெற வைத்தது. லட்சுமணன் மட்டும் அந்த போட்டியில் 281 ரன்களை குவிக்காமல் இருந்தால் நாங்கள் கண்டிப்பாக தோற்றிருப்போம். அந்த போட்டியின் கடைசி நாள் மாலை தேநீர் இடைவேளைக்கு பிறகு தான் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை வந்தது. அந்த டெஸ்டில் பெற்ற வெற்றி எனக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு பாடங்களை கற்றுக்கொடுத்தது. எதையுமே விட்டுவிடக்கூடாது, கடைசி வரை போராட வேண்டும் என்ற படிப்பினையை கற்றுக்கொடுத்தது என்றார் கங்குலி.